போலீஸ் ஏட்டுவின் உடலை சுமந்து சென்ற மாவட்ட சூப்பிரண்டு

பந்தலூர் அருகே லாரி மோதி இறந்த போலீஸ் ஏட்டுவின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமந்து சென்றார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2023-10-14 20:30 GMT

பந்தலூர் அருகே லாரி மோதி இறந்த போலீஸ் ஏட்டுவின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமந்து சென்றார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

போலீஸ் ஏட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே படிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக(ஏட்டு) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அனிஷிதா (36). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனிஷிதா, அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுள்ளியோடு பகுதியில் செயல்படும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஷ் சுள்ளியோட்டில் இருந்து சேரம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கப்பாலா ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, எதிரே மினி பஸ்சை முந்தி வந்த லாரி ஒன்று, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எருமாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த சேரம்பாடியை சேர்ந்த சரண்ராஜ் (34) என்பவரை கைது செய்தனர்.

போலீசார் அஞ்சலி

இந்தநிலையில் நேற்று அய்யன்கொல்லி அருகே கள்ளிச்சால் மயானத்தில் போலீஸ் ஏட்டு சதீசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், துணை சூப்பிரண்டுகள் செந்தில்குமார், செல்வராஜ், சேரம்பாடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் உள்ளிட்டோர் சதீஷ் உடலை சுமந்து சென்றனர். பின்னர் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க சதீஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் காவல்துறை சார்பில், போலீஸ் ஏட்டு சதீஷ் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்