பாசன வாய்க்காலில் கலக்கும் சாக்கடை கழிவுகள்

மடத்துக்குளம் பகுதியில் பாசன வாய்க்காலில் நேரடியாக சாக்கடைக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-04 14:09 GMT

பாழாகும் நீர்நிலைகள்

நீராதாரங்கள் தான் உயிர்களின் வாழ்வாதாரம் என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் ஆறு, ஓடை, குளம், குட்டை, ஊருணி உள்ளிட்ட நீராதாரங்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டினர். ஆனால் சமீப காலங்களாக நீர் நிலை பாதுகாப்பில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டும் நிலை உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் என்பவை மெகா சைஸ் குப்பைத் தொட்டிகளாகவே கருதப்படுகின்றன. இதனால் கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளை பாழாக்கி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கழிவு நீர் வெளியேற்றுவதற்கு முறையான திட்டங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டப்படவில்லை. இதனால் பல கிராமங்களில் வீடுகளிலிருந்து கழிவு நீரை வெளியேற்றப் பயன்படும் சாக்கடைக் கால்வாய்கள் நீர்நிலைகளுடன் இணைக்கப்படுவதால் நீராதாரங்கள் பாழாகி வருகிறது.

நோய்த்தொற்று

அந்தவகையில் மடத்துக்குளம் பகுதியில் ராஜவாய்க்காலில் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக கலக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

அமராவதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ராஜவாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழி நெடுக பல இடங்களில் கழிவுகள் கலக்கப்படுவதால் பாசன வாய்க்கால் சாக்கடைக்கால்வாய் போல மாறி விடுகிறது. குறிப்பாக மடத்துக்குளம் பெரிய வட்டாரம் பகுதியில் பல இடங்களில் சாக்கடைக்கழிவுகள் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது.கழிவு நீர் மட்டுமல்லாமல் குப்பைகள், பாலிதீன் கவர்கள் உள்ளிட்ட பலவிதமான கழிவுகளும் பாசன நீருடன் கலக்கின்றன.

இதனால் பாசன நீர் சாக்கடை போல கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கழிவு நீரில் ஆகாயத் தாமரைகள் முளைத்துள்ளதால் பெருமளவு நீரிழப்பு ஏற்படுகிறது.மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பலவிதமான கழிவுகள் பாசன நீருடன் கலந்து விளைநிலங்களுக்கு வந்து சேர்கிறது. இதனால் விளைநிலங்கள் பாழாகி வருகிறது.மேலும் பாசன நிலங்களுக்கு வரும் கழிவு நீரால் விவசாயிகள் பலவிதமான நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாசன நீரில் நேரடியாக கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரை உறிஞ்சு குழிகள் மூலம் சுத்திகரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்