அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் உறுதி
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கடலூரில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் உறுதி அளித்தனர்.;
முப்பெரும் விழா
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அரசு அங்கீகார நூற்றாண்டு தொடக்க விழா, புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு விழா, மாநில பொதுக்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழா கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் அமிர்தகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சையது அபுதாகீர், மாநில பொதுச்செயலாளர் தண்டபாணி, மாநில துணை பொதுச்செயலாளர் முருகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் செங்கேணி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, முன்னாள் தலைவர்கள் சூரியமூர்த்தி, அறிவுக்கரசு, சண்முகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
75 சதவீத வாக்குறுதி நிறைவேற்றம்
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 75 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம். மகளிர் உரிமை தொகை விரைவில் வழங்க இருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ்வசதி செய்து கொடுத்து இருக்கிறோம். அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை வைத்து வருகிறீர்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல உங்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றி தருவார் என்றார்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவார்
அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில், கலைஞர் கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சிறப்பு ஊதியம், சலுகைகள், திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். காலை உணவு திட்டத்தை கர்நாடக மாநிலத்திலும் செயல்படுத்த இருக்கிறார்கள். ஆகவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்றார்.
விழாவில் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மண்டல தலைவர்கள் சங்கீதா, பிரசன்னா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் முரளி உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார்.