தூய்மைப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தூய்மை பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே வழிவகுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-29 10:40 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட மண்டலங்களில் பல நூற்றுக்கணக்கான தூய்மைப்பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பெருங்கொடுமை நிகழ்ந்த நிலையில், மீதமுள்ள மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே வழிவகுக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் அரசாணை எண் 152-ஐ திரும்பப்பெற வேண்டுமென்று, தூய்மைப்பொறியாளர்கள் போராடிவரும் நிலையில் மீதமுள்ள பணியிடங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பு என்பது விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதாகும்.

சமூக நீதி எனப்பேசி அரசியல் செய்யும் திமுக அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பொறியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்கி குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது. இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா?. ஆகவே, திமுக அரசு சென்னை மாநகராட்சியில் மீதமுள்ள மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைத்து, தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கொடுஞ்செயலை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

மேலும், அரசாணை எண் 152-ஐ திரும்பப்பெற்று, தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சிகளிலும் தூய்மைப்பணிகளை மீண்டும் அரசே ஏற்றுநடத்துவதோடு, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் தூய்மைப் பொறியாளர்களாகப் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்