"எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது தெரியும்" - சபாநாயகர் அப்பாவு
"அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லையில் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் புகழை, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், வ.உ.சி.யின் பிறந்த நாளையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும் என்று கூறி, அதற்கு ரூ.85 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கப்படும்.
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சி. மற்றும் பாரதியார் ஆகியோர் படித்துள்ளதை போற்றும் வகையில் அங்கு நினைவு வளைவு மற்றும் கலையரங்கம் அமைக்க ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினை அவர்களது உட்கட்சி விவகாரம் ஆகும். அதற்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்குள் பல பிரிவுகளாக பிரிந்து உள்ளனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தேர்தல் ஆணையமும் உள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா என்னிடம் கொடுத்த மனு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு குறித்து சட்டமன்றம் கூடும்போது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.