உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-16 21:18 GMT

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். இந்த ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உயிர் பலிக்கு காரணம் கள்ளச்சாராயம் இல்லை. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், முத்து என்பவரிடம் வாங்கி உள்ளார். முத்து புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

சித்தாமூர், பெருக்கரணை, பேரம்பாக்கம் பகுதியில் விஷச்சாராயத்தை விற்பனை செய்த அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாராயத்தை அருந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இவர், இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த வேலு, அவரது சகோதரர் சந்திரன் ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வேலு பனையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். அவருக்கு இதனை விளம்பூரை சேர்ந்த விஜி என்பவர் விற்று இருக்கிறார். அவரும் இந்த விஷச்சாராயத்தை புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையிடம் இருந்து வாங்கி உள்ளார். எனவே சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்திருப்பது புலனாகி உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 37 ஆயிரத்து 217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதே போல் கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து விஷசாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்