வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-10-19 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் திரிசங்கு (வயது 80). இவருடைய மனைவி சிவபாக்கியம் (70). இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரிய மகன் ஏழுமலை அவரது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிசங்கு வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது அவர் இது என்னுடைய வீடு என்று கூறி திரிசங்கு, சிவபாக்கியம் ஆகியோரின் பொருட்களை வெளியே வீசி, வீட்டிலிருந்து வெளியேற்றியதாக தெரிகிறது.

இதுகுறித்து திரிசங்கு திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி் புகார் அளித்தார். அதில், என்னுடைய வீட்டில் இருந்து கொண்டு என்னை வெளியேற்றிய எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தம்பதி தீக்குளிக்க முயற்சி

இருப்பினும், இதுவரை ஏழுமலை மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திரிசங்கு, சிவபாக்கியம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாா், உடனே அவர்களை தடுத்து, நிறுத்தி் சமாதானப்படுத்தினர். அப்போது அவர்களிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்