சிகிச்சை பெற்று வந்த கட்டிட தொழிலாளி சாவு
வாலிபர், கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
வாலிபர், கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
கோவை அருகே உள்ள கோவைப்புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு பொள்ளாச்சிக்கு வந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கனகராஜ் திருவள்ளுவர் திடல் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு புளியம்பட்டியை சேர்ந்த பிளம்பர் வேலை பார்த்து வரும் வெங்கடேஷ் (31) என்பவர் வந்தார். அப்போது கனகராஜின் செல்போனை காணவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அருகில் இருந்த வெங்கடேஷிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் செல்போனை எடுக்கவில்லை என்று கூறினார்.
கொலை வழக்காக மாற்றம்
இதுதொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேஷ் ஆத்திரத்தில் அங்கு கிடந்த கல்லை எடுத்து கனகராஜை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். இதற்கிடையில கோவை அரசு ஆஸ்பத்திரியில் கனகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.