கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-04-17 19:00 GMT

ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞர் பேரவையினர் வந்து திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பேரவையின் மாநில செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டி.என்.டி., டி.என்.சி. இரட்டை சாதி சான்றிதழ் முறையை ஒழித்து 1979-க்கு முன்பு போலவே ஒரே டி.என்.டி. என்று சாதி சான்றிதழ் வழங்கிட தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரிடம் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி விட்டு கலைந்து சென்றனர்.

பல்வேறு நோய் தாக்குதல்

வேப்பந்தட்டை தாலுகா, மறவநத்தம் கிராம பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களது கிராமத்தில் இருந்து வி.களத்தூர் ஏரிக்கரை பாதையையொட்டி அமைந்துள்ள கண் கழிவுநீர் வாய்க்காலை கான்கிரீட் கால்வாயாக மாற்ற பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிம்பலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.

இதனால் தெருக்களில் இருந்து கழிவுநீர் வெளியே வர முடியாத அளவுக்கு கண் வாய்க்கால் அருகே உள்ள பாலத்தில் மண்ணை கொட்டி மூடிவிட்டதால், அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி...

வேப்பந்தட்டை தாலுகா, சாத்தனவாடி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் இருந்த பொது குடிநீர் கிணற்றை இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த பொது இடத்தை மீட்டு மறுபடியும், அதில் பொது குடிநீர் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

ஆலத்தூர் தாலுகா, கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தவர்கள், பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தி வருகிறோம். எனவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், பெரம்பலூரில் கொரோனா காலத்தில் மூடப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாத வாரச்சந்தையை பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மொத்தம் 260 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்