லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஆலங்குடியில் லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ஆலங்குடி:
தீப்பிடித்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்தவர் தங்கசாமி மகன் ரெங்கசாமி (வயது 58). இவர், பாச்சிக்கோட்டையில் இருந்து தனது லாரியில் தேங்காய் நார்களை ஏற்றி கொண்டு, மறவம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். பாச்சிக்கோட்டை-ஆலங்குடி சாலையில் வந்த போது, அந்த வழியாக சென்ற மின் வயரில் தேங்காய் நார் உரசியது. இதில் தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்தது.
சிறிது நேரத்தில் லாரியிலும் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த லாரி டிரைவர் லாரியில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கும், ஆலங்குடி போலீசார் மற்றும் மின்சாரத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தேங்காய் நார் எரிந்து நாசம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், தேங்காய் நார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் பின் பகுதியும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.