சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய், நதிகள் சீரமைப்பு பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய், நதிகள் சீரமைப்பு பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

Update: 2022-09-12 08:47 GMT

வெ.இறையன்பு ஆய்வு

சென்னை தொல்காப்பியப்பூங்கா, கோட்டூர்புரம் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் ஜி.என்.செட்டி சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, கோடம்பாக்கம் மண்டலம் காசி திரையரங்கம் அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்புப்பணிகள் மற்றும் சுமார் ரூ.2,371 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

அடையாறில் ரூ.4.32 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 0.60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாடுலர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அடையாறு மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் ரூ.16.16 கோடியில் அடையாறு ஆற்றின் வலது கரைப்பகுதியில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து மாற்று வழிகளை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

மாம்பலம் நீரோடையில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.14.21 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 4 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் தேனாம்பேட்டை ஜி.என்.சாலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.6.2 கோடியில் 950 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டும் பணியும், காசி தியேட்டர் அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகளையும் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பின்னர் நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ரூ.47.24 கோடியில் 10 எம்.எல்.டி. திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்