மத்திய அரசு திட்ட நிதியை மீண்டும் வழங்க வேண்டும்
வடகாடு பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்ட நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி வழங்குவது நிறுத்தம்
பாரத பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண்மை துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு தவணை தொகை வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி வடகாடு பகுதியை சேர்ந்த பல விவசாயிகளுக்கு அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆவணங்கள் இல்லையென...
இது குறித்து கீழாத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் கூறியதாவது:- இந்த நிதியுதவி திட்டத்திற்காக ஏற்கனவே உரிய அடங்கல் மற்றும் பிற ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டுத்தான் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது திடீரென உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது சரியானது இல்லை.
உடனடியாக வழங்க வேண்டும்
கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த அழகிரி:- சில ஆண்டுகளாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த நிதிக்கு, தற்போது உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நேரடி பட்டாதாரர்களுக்கு கூட பல்வேறு காரணங்களால் அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க மாட்டார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் தவித்து வரும் விவசாயிகளுக்கு, ஏற்கனவே வழங்கி வந்த நிதியையும் நிறுத்தக்கூடாது. எனவே நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, உடனடியாக அந்த நிதியை வழங்க வேண்டும்.
மீண்டும் நிதியுதவி
விவசாயி பன்னீர்செல்வம்:- இப்பகுதியில் படிக்காத விவசாயிகள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் இ-கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே பிரதம மந்திரியின் கவுரவ நிதியுதவி திட்டம் மூலம் நிதியுதவி கிடைக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. மேலும் கிராம இ-சேவை மையங்களில் சென்று சரிபார்த்தாலும் நிதி கிடைக்கவில்லை என்று ஏராளமான விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். எனவே கிராமப்புறங்களில் அதற்கான முகாம் நடத்தி, விவசாயிகளுக்கு மீண்டும் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவர்த்தி செய்ய வேண்டும்
வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி:- ஏற்கனவே கஜா புயல், கொரோனா தொற்று மற்றும் விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு போன்றவைகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, வேதனைப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு திட்டத்தில் கிடைக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. முறையான ஆவணங்களை விவசாயிகள் இணைக்கவில்லை என்றால் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவற்றை நிவர்த்தி செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும். அதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவது சரியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.