வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது

கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து கலெக்டரிடம், அரசு ஊழியர்கள் புகார் அளித்தனர்.

Update: 2023-02-27 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து கலெக்டரிடம், அரசு ஊழியர்கள் புகார் அளித்தனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

கூடலூர் மார்தோமா நகரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக பி, சி, டி பிரிவுகளில் 144 குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் அனைத்து குடியிருப்புகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 30 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் மூடியே காணப்படுகிறது. இதன் காரணமாக பழுதடைந்த குடியிருப்புகளில் அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே வசித்து வருகின்றனர்.

சிமெண்டு பூச்சு பெயர்ந்தது

இந்த நிலையில் சி பிரிவில் 4-ம் எண் வீட்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு சமையலறை சுவரின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. மேலும் மற்றொரு பகுதி உடைந்து விழுந்தது.

இந்த சமயத்தில் சமையலறையில் நின்றிருந்த விக்டரின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். பின்னர் வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மேலும் அச்சமடைந்து உள்ளனர்.

கலெக்டரிடம் புகார்

இதையடுத்து கூடலூர் வீட்டு வசதி வாரிய அரசு ஊழியர் குடும்பத்தினர், கலெக்டரிடம் நேரடியாக சென்று புகார் மனு அளித்தனர். அதில், புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்