தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்குள் புகுந்தது
பள்ளிபாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்கு புகுந்தது. இதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
பள்ளிபாளையம்
தாறுமாறாக ஓடிய கார்
திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் நோக்கி நேற்று காலை 3 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். பள்ளிபாளையம் அடுத்த அக்ரகாரம் பகுதியில் அந்த கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற 3 பெண்கள் மீது மோதியது.
இதைத்தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார் அதே பகுதியில் சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த மின்கம்பத்தின் மீதும் மோதி நின்றது. இதில் கஸ்தூரி, மல்லிகா ஆகிய இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பெண் கீதாவுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
3 பேர் காயம்
இந்த விபத்தில் காா் மோதியதில் ஓட்டல் கடையின் முன்புறம் பகுதி சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பத்தில் மோதியதால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் 3 பெண்கள் மீது மோதிவிட்டு ஓட்டலுக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.