நெல்குவியல் மீது மோதிய கார் வாய்க்காலுக்குள் பாய்ந்தது

தஞ்சை அருகே சாலையில் காயவைப்பதற்காக குவித்து வைத்திருந்த நெல் குவியல் மீது கார் மோதியதில், அருகில் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Update: 2023-10-18 20:40 GMT

தஞ்சை அருகே சாலையில் காயவைப்பதற்காக குவித்து வைத்திருந்த நெல் குவியல் மீது கார் மோதியதில், அருகில் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காரில் 7 பேர் பயணம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 64) இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் கோயம்புத்தூருக்கு நேற்று காலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவரான மற்றொரு நடராஜன் என்பவர் ஓட்டினார். தஞ்சை அருகே உள்ள 8 நம்பர் கரம்பையில் உள்ள பைபாஸ் சாலையில் கார் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார். ஆனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி அருகில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதையடுத்து காரில் விபத்தில் சிக்கி காயமின்றி இருந்த 3 பேரை அங்கிருந்த கிராம மக்கள் மீட்டனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டனர்

மேலும் கார் உரிமையாளரான நடராஜன், டிரைவர் நடராஜன் (65), ஜெயலட்சுமி (41), சுலோச்சனா (68), ஆகிய 4 பேர் காரில் சிக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாக தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தை பார்த்துவிட்டு ஆம்புலன்சில் இருந்து இறங்கி காரில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஆனால் அவர்கள் வர தாமதம் ஆனதால் ஆம்புலன்சு ஊழியர்களான செவிலியர் தட்சிணாமூர்த்தி, டிரைவர் ஹரிஹரசுதன் இருவரும், கிராம மக்கள் உதவியுடன் காரில் காயத்துடன் சிக்கி இருந்தவர்களை சாதுர்யமாக மீட்டு, அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவகல்லுாரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தை கண்டு உடனடியாக, ஆம்புலன்சை நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்சு, ஊழியர்களை கிராமமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்