சாலையோர தடுப்பில் மோதிய கார்
சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர்,
சிவகாசி தாலுகா ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 27). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் கோமதி (23). தனியார் மருந்தக ஊழியர். இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் காரில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சாய்பாபா கோவில் எதிர்புறம் மகேஸ்வரன் ஓட்டிவந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இதில் காருக்குள் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.