ராயக்கோட்டை
உத்தனப்பள்ளி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம் அடைந்தனர்.
அரசு பஸ் கவிழ்ந்தது
தர்மபுரியில் இருந்து ஓசூருக்கு நேற்று காலை அரசு பஸ் வந்தது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஜெயவேல் (வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். ஜெயராமன் ( 40) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் ஏரி அருகே பஸ் வந்த போது முன்னால் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 பேர் காயம்
இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் மற்ற பஸ் பயணிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.