கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருவேதிக்குடி கிராமத்தில் உள்ள வேதகுரு ஈஸ்வர சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பிரதாப சிம்ம ராஜாவிற்கு சொந்தமானவை. திருவேதிக்குடி ஊராட்சி தலைவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட முயற்சித்தார். ஆனால் இதை எதிர்த்து ஏராளமான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு பின்னர் திட்ட அலுவலரின் துணையுடன் அந்த கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனை தடுத்து நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருவேதிக்குடி கிராமத்தில் உள்ள வேதகுரு ஈஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரர் தெரிவிக்கும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும். எனவே இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்து கொள்ளும்படி மனுதாரருக்கும், அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்தனர்.