எருமை மாடுகள் ஏற்றி வந்த4 லாரிகள் சிறைபிடிப்பு

உளுந்தூர்பேட்டையில் எருமை மாடுகளை ஏற்றி வந்த 4 லாரிகளை இந்து மகா சபா நிர்வாகிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-07-03 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

லாரிகள் சிறைபிடிப்பு

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு எருமை மாடுகள் சட்ட விரோதமாக லாரிகளில் அடைத்து கொண்டு செல்லப்படுவதாக இந்து மகா சபா நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபா நிர்வாகிகள் சிலர் உளுந்தூர்பேட்டை சின்னக்குப்பத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கண்காணித்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த 4 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது லாரிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் இருந்ததை கண்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து 4 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட எருமை மாடுகள் கடத்தி செல்லப்படுகிறதா? அல்லது அரசு விதிமுறைகளுக்குட்பட்டு ஏற்றி செல்லப்படுகிறதா? என்பது குறித்து டிரைவர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எருமை மாடுகள் சட்டத்துக்கு புறம்பாக ஏற்றி வரப்பட்டது தெரியவந்தால் அவற்றை கோசலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் லாரிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்