கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண்

வடமாநில சிறுவன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2023-08-23 19:00 GMT


கோவை


வடமாநில சிறுவன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.


வடமாநில சிறுவன்


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 17). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செங்கோடன்பாளையம் புதூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கி இருந்தனர்.


இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி இரவு 10 மணியளவில் வேலை செய்த இடத்தில் தங்கி இருந்த சந்தோஷ்குமார் மற்றும் அங்கு வேலை செய்து வந்த பீகார் மாநில வாலிபர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


கல்லால் அடித்து கொலை


முதலில் வாக்குவாதத்தில் தொடங்கிய தகராறு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர். இதில் ராஜேஷ் குமார் (24), ரஞ்சித்குமார் (22) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 4 பேர் சேர்ந்து சந்தோஷ்குமாரை கல்லால் தாக்கினார்கள்.


இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பீகாரை சேர்ந்த உகன் சவுத்திரி (38), சாந்து மான்ஜி (30), அவருடைய தம்பி கணேஷ் மான்ஜி (26), மற்றும் சங்கர் மான்ஜி (33) ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் சந்தோஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது.


அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண்


இதை தொடர்ந்து போலீசார் உகன் சவுத்திரி, சங்கர் மான்ஜி ஆகியோரை கைது செய்தனர். சகோதர்களான சாந்து மான்ஜி, கணேஷ் மான்ஜி ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.


இந்ந நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரும் கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்