100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2024-05-23 04:07 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்தநிலையில், நேற்று மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டாக வந்தது. இதனால் பணம் எடுத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

குறிப்பிட்ட தொகைக்கு மேலாக பணம் வந்ததால் சிலர் உற்சாகமடைந்தனர். இதற்கிடையே ஏ.டி.எம்.மில் இருந்து அதிக தொகை வருவதாக தகவல் அப்பகுதியில் பரவியது. இதையறிந்த ஏ.டி.எம். எந்திர ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை பரிசோதனை செய்தனர்.

அதில் ரூ.100 நோட்டுகள் வைக்கும் இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டு வந்துள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.2½ லட்சம் வரை பணம் பட்டுவாடா ஆகியுள்ளது.

மேலும் ஏ.டி.எம்.மில் இருந்து கூடுதலாக பணம் எடுத்தவர்கள் சிலர் பணத்தை திருப்பி கொடுத்ததில் ரூ.60 ஆயிரம் வந்துள்ளது. மற்றவர்களின் வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கீரனூரில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்