வீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை

வீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

Update: 2023-06-22 19:11 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தினரின் பட்டா நிலத்தின் வழியாக 75 குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பிரதான சாலைக்கு செல்ல தற்போது பயன்படுத்தி வரும் வழியில் பொதுசாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இருவரின் வீட்டின் முன்புறமும், பின்புறமும் பள்ளம் தோண்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது குறித்து இரு குடும்பத்தினரும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் அவரது தலைமையில் வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானு ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடம் குறித்து கேட்டறிந்து இரு தரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு குடும்பத்தினரின் பட்டா இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதால் சாலை அமைக்க எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி, அரசுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர், ஊர் பொதுமக்கள், பட்டா நிலத்தின் இரண்டு குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்