ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ. 4.81 கோடி செலவு என தகவல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-08-31 09:51 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடங்கி, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என விசாரணை நீண்டது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார். அதன்படி சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ஆன செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி மற்றும் அலுவலர்களின் ஊதியம், மருத்துவம், வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசிக் கட்டணம், வாகன பராமரிப்பு, அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், ஒப்பந்த ஊதியம் என 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ம் ஆண்டு 30 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும், 2019ம் ஆண்டு 83 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயும், 2020ம் ஆண்டு ஒரு கோடியே 8 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும், 2021ம் ஆண்டு ஒரு கோடியே 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 2022ம் ஆண்டு ஒரு கோடியே 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. விசாரணையின் 6 நிதியாண்டில் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே திமுக அரசு அதிக நிதியை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்