சைதாப்பேட்டையில் 17 வயது சிறுவனை கொலை செய்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சைதாப்பேட்டையில் 17 வயது சிறுவனை கொலை செய்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-26 04:35 GMT

சென்னை சைதாப்பேட்டை செட்டித் தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22), அசோக்குமார் (22), ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி (22), பல்லு பிரவீன் (22) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் அவர்கள் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் சிக்கிய மறைமலைநகர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (28), முகப்பேர் மேற்கு பகுதியை தினேஷ் (24), நில மோசடி வழக்கில் சிக்கிய புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் அளித்துவிட்டு அதனை மீறிய 11 பேர் ஜாமீனில் வரமுடியாத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்