நாளை தொடங்க இருந்த நிலையில் அண்ணாமலையின் 2-ம் கட்ட நடை பயணம் மாற்றியமைப்பு - நாளை மறுதினம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார்

நாளை தொடங்க இருந்த அண்ணாமலையின் 2-ம் கட்ட நடை பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார்.

Update: 2023-09-02 00:28 GMT

மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையிலும், ஊழலுக்கு எதிராகவும் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி நடைபயணத்தை தொடங்கினார். 23 நாட்களில் 41 தொகுதிகளில் மேற்கொண்ட முதல் கட்ட நடைபயணத்தை அவர் கடந்த மாதம் 22-ந் தேதி நிறைவு செய்தார்.

அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலங்குளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் வருகைக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், நாளை மறுதினம் அதாவது 4-ந் தேதி ஆலங்குளத்தில் 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கி, தொடர்ந்து அண்ணாமலை தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டிப்பட்டி, கம்பம், பெரியகுளம், கொடைக்கானல், நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, ஊட்டி என பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு செப்.28-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் நிறைவு செய்கிறார்.

அதன்படி, 2-ம் கட்ட நடைபயணம் 19 நாட்கள் செல்வதற்கு அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார். இதில், தென்காசியில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல், கோவையில் நடைபெறும் நடை பயணத்தின்போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொள்ள இருக்கிறார் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்