கடலூரில் பா.ம.க. சார்பில் போட்டியிட மறுப்பா - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தங்கர் பச்சான்

கடலூரில் பா.ம.க. சார்பில் போட்டியிடுவதை தங்கர் பச்சான் உறுதி செய்துள்ளார்.

Update: 2024-03-22 12:35 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.

இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாகவும், அவரது விருப்பம் இல்லாமலே அவரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் அத்தகைய செய்திகளுக்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், "கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். அத்துடன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டு, தான் பா.ம.க. சார்பில் கடலூரில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்