தஞ்சையில் போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

Update: 2022-09-15 20:48 GMT

தமிழக போலீஸ் டி, ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு போலீஸ் நிலையம் அருகே சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் அருகே பாக்குவரத்து விதிமுறைகள் குறித்த சிறுவர்களுக்கான நவீன பூங்கா அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி மதிப்பில், 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றங்களை குறைக்க முடியும். வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பியோடியவர்களின் வாகன எணணை தெளிவாக கண்டறியலாம்.

தஞ்சையில் உள்ள தனியார் உணவகத்தில் 5½ கிலோ நகை கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன. 

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

மேலும் 1,480 போலீஸ் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கும்பகோணம்

மேலும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஜ.ஜி.ஜெயந்த் முரளி ஆகியோர் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டனர். பின்னர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில்,கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 187 புராதன சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 60 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகளை எக்காலத்திலும் திருட முடியாத வகையில் சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன், 3-டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு ரேடியோ அலைவரிசை கருவி பொருத்தப்பட்டுள்ளது. போதை பொருட்களை விற்று சம்பாதித்த 2 ஆயிரம் பேரின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்