தூத்துக்குடியில் நாளை பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-08-03 18:45 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

பனிமயமாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேரோட்டம் நடந்து உள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவையொட்டி 16-வது முறையாக தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப்நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தங்கத்தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்