வேளிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-04 18:45 GMT

தக்கலை:

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேளிமலை முருகன் கோவில்

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு நேற்று தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு முருகபெருமானும், வள்ளிதேவியும் ஆராட்டுக்கு எழுந்தருளினார்கள். தொடர்ந்து கோவில் தெப்பக்குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நடத்தப்பட்டு, படித்துறையில் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து சாமிகள் கோவிலுக்கு வந்தபிறகு, கோவில் கிழக்கு வாசலில் முன்புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நெற்கதிர் கட்டுகளை கீழ்சாந்தி தலையில் சுமந்தபடி கோவிலுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் வைத்து நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெற்றன. அதைதொடர்ந்து நெற்கதிர்களை சாமியின் பாதங்களில் வைத்து பூஜை நடத்தப்பட்டு, மூலஸ்தானம், உள்பிரகாரத்திலுள்ள சாமி சன்னதிகள் போன்றவற்றில் நெற்கதிர்களை கட்டினார்கள். அதன்பின் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

வருஷாபிஷேகம்

இந்தநிகழ்ச்சிக்கு பின் ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முருகபெருமானுக்கும், வள்ளிதேவிக்கும் நடக்கும் திருக்கல்யாண விழாவிற்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையெட்டி மதியம் வருஷாபிஷேகம் நடந்தது. 21 கும்பங்களில் கலச பூஜை செய்து அதனை கோவில் மூலவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தில் இருந்தும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் நேற்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்