பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு
பாட புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
2022-23-ம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டு விட்டன. கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க உள்ளது.
அந்த வகையில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில், எந்தவித தொய்வும் இல்லாமல், புத்தகங்கள், கல்வி உபகரணங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கிடுவதற்கான பணிகளில் கல்வித்துறை முழு வீச்சில் இறங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2023-24-ம் ஆண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான பாடநூல்கள், 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான நோட்டு புத்தகங்கள், இதர கல்வி உபகரண பொருட்களின் தேவைப்பட்டியல்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் மூலமாக மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
பள்ளி திறப்பதற்கு முன்பாகவே வினியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, எவ்வித காலதாமதத்துக்கும் இடம் அளிக்காமல் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ-மாணவிகளுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், இதர கல்வி உபகரண பொருட்கள் வழங்கிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.