தூத்துக்குடியில் பயங்கரம்நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலையா?

தூத்துக்குடியில் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பாடாரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-08-18 18:45 GMT

தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் உடலில் காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கனி. இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 68). இவர் தனது கணவர் இறந்து விட்டதால் அவரது ஓய்வூதியத்தை வைத்து பிழைப்பு நடத்தியதுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பக்க கேட் பூட்டி இருந்தது. ஆனால் வீட்டின் மெயின் கதவு திறந்து கிடந்தது. மேலும், அந்தோணியம்மாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக கிடந்தார்

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு அந்தோணியம்மாள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் காயமும் இருந்து உள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலையில் தடயவியல் துறை உதவி இயக்குனர் கலாலட்சுமி தலைமையிலான நிபுணர்கள் மூதாட்டியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டுக்கு வெளியில் 2 பித்தளை கம்மல்கள் கிடந்தன. அவற்ைற சேகரித்து உள்ளனர்.

அடித்துக் கொலையா?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் நகைக்காக மூதாட்டியை மர்மநபர்கள் அடித்துக் கொைல செய்தார்களா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கொள்ளை

இந்த சம்பவம் குறித்து தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த கத்தார் பாலு என்பவர் கூறும்போது, 'மூதாட்டி அந்தோணியம்மாள் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒரு கும்பல் பணம், நகையை கொள்ளையடித்து சென்றது. அதன்பிறகும் ஒருமுறை மர்ம கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து மதுகுடித்து ரகளை செய்தது. இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் தற்போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஆகையால் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்