மல்லூர் அருகே நிலத்தகராறில் பயங்கரம்:அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலைஅண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது
மல்லூர் அருகே நிலத்தகராறில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மண்வெட்டியால் தீர்த்துக்கட்டிய அண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி,
அரசு பஸ் டிரைவர்
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாரப்பட்டி தொட்டியங்காட்டை சேர்ந்த துர்க்கையன் மகன் குழந்தைவேல் (வயது 55), அரசு பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (62). விவசாயி. உறவினர்களான இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது. இவர்களது வீட்டுக்கு செல்லும் பாதையை இருவரும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த பாதை தொடர்பாக நீண்ட நாட்களாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கிடையே குழந்தைவேல், புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். அதற்காக பிரச்சினைக்குரிய பாதை அருகில் உள்ள இடத்தில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தார்.
மண்வெட்டியால் தாக்குதல்
கடந்த திங்கட்கிழமை மின்வாரிய ஊழியர்கள் மற்றும் குழந்தைவேல் ஆகியோர் மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வந்த சின்னச்சாமி, அவருடைய மகன்கள் கணேசன் (36), தினேஷ் (28), சுரேஷ் (31) மற்றும் சின்னச்சாமி தம்பி ராஜா ஆகியோர் பாதை ஏற்கனவே பிரச்சினையில் உள்ளது. அதன் அருகில் எப்படி வீட்டை கட்ட முடியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த சின்னச்சாமியின் தம்பி ராஜா அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து குழந்தைவேல் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் சாவு
அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தைவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தைவேல் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி, அவருடைய தம்பி ராஜா, சின்னச்சாமியின் மகன்கள் கணேசன், தினேஷ், சுரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பாதை பிரச்சினையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையுண்ட குழந்தைவேலுக்கு சுமதி (40) என்ற மனைவியும், தனிஷ்குமார் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர்.