எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ

சிவகாசியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில்,பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2023-02-02 18:48 GMT

சிவகாசி

சிவகாசியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில், நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எலக்ட்ரிக்கல் கடை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள மணிநகரில் ரவி என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் முழுவதும் விலை உயர்ந்த எலக்ட்ரிக் பொருட்களை சேமித்து வைத்து விற்பனை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த நிலையில் அதிகாலை 2 மணிக்கு கடையில் இருந்து புகை வெளிவந்துள்ளது.

அப்போது அந்த வழியாக சென்ற சிலர் இதை கவனித்து, சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கினர்.

தீயணைப்பு வாகனங்கள்

தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

முதல் மற்றும் 2-வது மாடியில் பிடித்த தீயை அணைக்க போதிய உபகரணங்கள் விருதுநகர் தீயணைப்பு துறையிடம் இல்லாததால் ராட்சத கிரேன் எந்திரத்தை வரவழைத்து தீயணைப்பு வீரர்கள் துணிச்சலுடன் மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

ஏராளமான பொருட்கள் நாசம்

இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக்கல் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தீ விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், எலக்ட்ரிக்கல் கடையில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது, மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடத்து இருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்