அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; தொழிலாளி பலி

நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-12-22 18:45 GMT

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு, 5 அனல்மின் நிலையங்கள் மூலமாக மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 2-வது அனல் மின்நிலையம் 1,470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு மின் உற்பத்தி செய்வதற்கு 7 அலகுகள் உள்ளன. இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள 6-வது அலகில் கடந்த மே மாதம் 7-ந்தேதி கொதிகலன் வெடித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நடைபெற்று 2 மாதத்திற்குள், 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 5-வது அலகின் கொதிகலன் வெடித்து சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதிய அனல்மின் நிலையம்

நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் என்.எல்.சி. நிரந்தர ஊழியர்கள், இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மதியம் நெய்வேலி புதிய அனல் மின்நிலையத்தின் பாய்லர் பிரிவில் நிரந்தர தொழிலாளியான நெய்வேலி அடுத்த வீரசிங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் தட்சிணாமூர்த்தி (வயது 54), இன்கோசர்வ் தொழிலாளர்களான வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் திருநாவுக்கரசு(47), ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் செல்வராஜ்(47), நெய்வேலி 5-வது வட்டத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ்(43), வடலூர் அடுத்த கோட்டகம் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் செந்தில்குமார் ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாய்லர் பிரிவில் தீ விபத்து

அப்போது பாய்லர் பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தட்சிணாமூர்த்தி உள்பட 5 பேரும் பலத்த தீக்காயமடைந்து வலியால் அலறித்துடித்தனர்.

இந்த சத்தம் கேட்ட அருகில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதற்கிடையே இந்த விபத்து பற்றி அறிந்த என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் படுகாயமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

மேலும் தீ விபத்து நடைபெற்ற இடத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார். விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். ராதாகிருஷ்ணன், நெய்வேலி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் புதிய அனல்மின் நிலையத்திற்கு வந்து தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து என்.எல்.சி. உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்