சமூக விரோதிகளின் கூடாரமான சுரங்கப்பாதை

பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப்பாதை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Update: 2022-06-25 14:48 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப்பாதை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுரங்கப்பாதை

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் ஒரு புறம் பழைய பஸ் நிலையமும், மற்றொரு புறம் புதிய பஸ் நிலையம் உள்ளது.

இந்த பஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படும் அவல நிலை இருந்தது.

எனவே பொள்ளாச்சியில் ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்துக்கு பயணிகள் செல்லவும், பொது மக்கள் ரோட்டை கடக்கவும் வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

சமூக விரோதிகள்

அதை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவது இல்லை. இதற்கு சுரங்கப்பாதையில் பகல் நேரத்திலேயே சிலர் மது குடிக் கிறார்கள். அவர்கள் அங்கேயே மதுபாட்டில்களை வீசி விட்டு செல்வதால் அந்த இடமே மது பார் போல் காட்சி அளிக்கிறது.

எனவே சுரங்கப்பாதையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்ப டும் நிலை உள்ளது. இதை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் சுரங்கப்பாதை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மது அருந்தி தகராறு

பொள்ளாச்சி நகரின் மைய பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்ளன.

இதனால் அங்கு வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு சுரங்கப்பாதை இருப்பதே தெரிவது இல்லை.

உள்ளூர் பயணிகள் சுரங்கப்பாதையை அதிகம் பயன்படுத்தாத நிலை உள்ளது. அதை ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த சுரங்கப்பாதைக்குள் மர்ம ஆசாமிகள் மது அருந்துகின்றனர். மதுபாட்டில்களை அங்கேயே வீசி விட்டு தகராறில் ஈடுபடுகின்ற னர்.

பெண்கள் அச்சம்

இதனால் சுரங்கப்பாதை வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளை கேலி செய்து, துப்பட்டாவை பிடித்து இழுத்த சம்பவமும் அரங்கேறியது. அந்த செயலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

இதன் காரணமாக சுரங்கப்பாதை வழியாக செல்ல மாணவிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர்.

சுரங்கப்பாதை பயன்பாடு இன்றி உள்ளதால் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக பாலக்காடு ரோட்டை கடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

கண்காணிப்பு கேமரா

எனவே சுரங்கப்பாதையை பொதுமக்கள் முழுமையாக பயன் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்க பாதை நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா உள்ளது.

அது போல் சுரங்கப்பாதை உள்ளேயும் கேமராக்களை பொருத்தி கண்கா ணிக்க வேண்டும்.

அதற்குள் அடிக்கடி போலீசார் ரோந்து செல்ல வேண்டும். சுரங்கப்பாதை நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

அப்போது தான் சுரங்கப்பாதை அமைத்ததற்கு உண்மையான பலன் கிடைக்கும். மேலும் பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் விபத்து நடப்பதையும் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

................................................

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள சுரங்க பாதையில் மது பாட்டில்கள் கிடப்பதை படத்தில் காணலாம்.

----

Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI

மேலும் செய்திகள்