கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-26 07:03 GMT

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு திபதி மஞ்சுளா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியான போது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி தற்போது பேசி வருகிறார். தனபால் கடந்த 5 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று வாதிட்டார்.

இறுதியில் நீதிபதி மஞ்சுளா, தனபால் கருத்துக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருப்பதற்கு முகாந்திரம் உள்ளது என்றும் தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்