வனதுர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தோப்புத்துறை அருகே வடகட்டளை வனதுா்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

Update: 2023-06-23 19:15 GMT

வேதாரண்யம்;

தோப்புத்துறை அருகே வடகட்டளை வனதுா்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

வனதுர்க்கை அம்மன் கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3-லும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில் 4 வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக புராண வரலாறு கூறுகிறது.அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம் இந்த கோவில் ஆகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த தோப்புத்துறை- வடகட்டளையில் பிரசித்தி பெற்ற வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

3 சக்திகள்

வேதாண்யேஸ்வரர் கோவிலின் வடக்கு திசையில் காக்கும் கடவுளாக, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என 3 சக்தியையும் சேர்த்து துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளாக விளங்கி, 18 புராணங்களில் மார்க்கண்டேய புராணயம் என்ற நூலில் பரப்பிரம்மமாக சக்தியாக சகல மூர்த்திகளும் ஒருங்கிணைந்த மூர்த்தியாக வனதுர்க்கா தேவி விளங்குகிறாா். சுயம்பு மூர்த்தியாக கலியுகத்தில் தானாக தோன்றி அகஸ்தியர் பூஜை செய்து, வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து கலியுகத்தில் அனுக்கிரஹ தெய்வமாக வனதுர்க்கா தேவி அருள்பாலிக்கிறார்.

கும்பாபிஷேகம்

இந்த வனதுர்க்கா அம்மனை தங்களது இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் எண்ணி ஆறுகாட்டுத்துறை, தோப்புத்துறை, வடகட்டளை, வேதாரண்யம் நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் விளக்கேற்றி, அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.பல்வேறு அற்புதங்கள் நடத்தி வரும் இந்த வனதுர்க்கா தேவிக்கு புதிதாக ராஜகோபுரம் மற்றும் யாகசாலை, மடப்பள்ளி, தீப மண்டபம், பிரகார மதில்கள், உணவு அருந்தும் கூடம், பிரகார மண்டபம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான மண்டப கர்ப்பகிரகம் வர்ணம் பூசப்பட்டு புணரமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடக்கிறது.

யாக சாலை பூஜை

கடந்த 18-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. 19-ந் தேதி நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதியும், 20-ந் தேதி மகாலெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தியும், 21-ந் தேதி திசா ஹோமமும், 22-ந் தேதி முதற்கால யாகசாலை பூஜையும், யாத்ர ஹோமமும் நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.இன்று(சனிக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் கடம் புறப்பட்டு காலை 11.10 மணியக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும், மாலை மகாஅபிஷேகமும் நடக்கிறது. வேதாரண்யம்- நாகை சாலையில் தோப்புத்துறை பகுதியில் வள்ளியம்சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராமமக்கள், தோப்புத்துறை இந்து நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்