பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-04-04 18:45 GMT

தர்மபுரி:

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழா

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஆறுமுக காவடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

நெசவாளர் நகர்

தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அன்பளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி எஸ்.வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி, கோட்டை கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் சன்னதி, பாரதிபுரம் சிவசுப்பிரமணிய கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்