தர்மபுரி குமாரசாமிப்பேட்டைஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாதிரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

Update: 2023-02-17 19:00 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வெள்ளிகவச அலங்காரம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மகா கணபதி, சுப்ரமணியர், அம்பாள் ஹோமம் மற்றும் சக்தி கரகம் அழைத்தல் நடைபெற்றது. தொடர்ந்து ஆதிஷேச வாகனத்தில் அம்மன் வெள்ளிகவச அலங்காரத்தில் திருவீதி உலா வருதல் நடந்தது.

விழாவையொட்டி நேற்று சக்திகரக ஊர்வலம், குண்ட பூஜை மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரி சக்தி கரகம் ஏந்தி தீமிதித்தார். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவில் வளாகத்தில் தரையில் படுத்து இருந்த பக்தர்கள் மீது சக்தி கரகத்துடன் வந்த கோவில் பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்றார். இதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருக்கல்யாணம்

விழாவில் இன்று (சனிக்கிழமை) பொங்கல் வைத்தல், கங்கை பூஜை மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பால்குட ஊர்வலம், ஸ்ரீ தாண்டவேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் முகவெட்டு ஊர்வலம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நாளான 20-ம் தேதி காலை பிரார்த்தனைதாரர்களுக்கு அலகு போடுதலும், பூத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான புறப்படுதலும், தொடர்ந்து குமாரசாமிப்பேட்டை மயானத்தில் மயான கொள்ளை திருவிழாவும் நடக்கிறது. அன்று இரவு கண்ணாடி மின்விளக்கு ரதத்தில் பூ பல்லக்கு ஜோடனைகளுடன் பூத வாகனத்தில் அம்மன் திருவீதிஉலா மற்றும் அம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.

கும்ப பூஜை

21-ம் தேதி பல்லக்கு உற்சவம் மற்றும் முன்பின் ஜோடனை அலங்காரத்தில் குதிரை மண்டப ரதத்தில் அம்மன் திருவீதி உலாவும், வருகிற 22-ம் தேதி பிள்ளை பாவு ஊர்வலம், கும்ப பூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. விழாவையொட்டி பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை 24 மணி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்