ஆடி மாத முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-07-21 19:00 GMT

ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்பட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் ராஜீவ் காந்தி நகரில் உள்ள மங்கள மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள்காப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி சக்தி மாரியம்மன் பால்குட அபிஷேக குழு சார்பில் 33-ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு கோவிலில் இருந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக நடந்து கோவிலை வந்தடைந்தனர். மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி மாரியம்மன் பால்குட அபிஷேக குழுவினர், மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நன்செய் இடையாறு மாரியம்மன், வேலூர் புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மோகனூர், குமாரபாளையம்

மோகனூர் சுப்ரமணியபுரம் காமாட்சியம்மன், முத்துக்குமார் சாமி கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. துர்க்கை அம்மனுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் காமாட்சி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதேபோல் வள்ளியம்மன் கோவில், காளியம்மன் கோவில், சுண்டக்காய் செல்லாண்டியம்மன் கோவில், ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அருகே ஒடுவன்குறிச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. விநாயகர் சிறப்பு பூஜை, மகா கணபதி யாகம், நவக்கிரக யாகம் நடந்தது. விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு 1008 மலர்களை கொண்டு சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்