பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-03 09:03 GMT

நெல்லை,

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் மார்ச் 29-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறை 324, 326, 506-1 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வரும் 5-ம் தேதி நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்