24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேர் மாற்றுக்கடைகளில் பணியில் சேர்வதற்கான கலந்தாய்வு

திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேர் மாற்றுக்கடைகளில் பணியில் சேர்வதற்கான கலந்தாய்வு பணிமூப்பு அடிப்படையில் நடைபெற்றது.

Update: 2023-07-01 17:54 GMT

24 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கோவில் அருகில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்த வாரம் 500 கடைகள் மூடப்பட்டது. கோவை மண்டலத்திற்குட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளிலும் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அரசு அறிவித்திருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் 22 பேர், விற்பனையாளர்கள் 40 பேர், உதவி விற்பனையாளர்கள் 26 பேர் என மொத்தம் 88 பேர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியம் தலைமையில், கிடங்கு மேலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 88 ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களது பணிமூப்பு தொடர்பான ஆவணங்களையும், சான்றிதழ்களையும் சமர்ப்பித்தனர்.

88 பேருக்கு கலந்தாய்வு

கலந்தாய்வு குறித்து டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதை தமிழக அரசு ஏற்கனவே உறுதி செய்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 88 பேருக்கு கலந்தாய்வின் மூலம் பணிமூப்பு அடிப்படையில் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கலந்தாய்வில் கலந்து கொண்ட ஊழியர்கள் கூறும்போது, அரசு அறிவுறுத்தலின்படி கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும், பணிமூப்பு அடிப்படையிலும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. ஏற்கனவே பணியாற்றிய கடைகள் மூடப்பட்டாலும், மீண்டும் வேலை கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், தமிழக அரசுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர். முன்னதாக கலந்தாய்வை ஒட்டி ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட கடைகள், அதில் பணியாற்றிய ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கலந்தாய்வுக்கான விவரங்கள் அனைத்தும் அறிவிப்பாக டாஸ்மாக் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்