டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி

குளச்சல் அருகே பணம் பறிக்கும் நோக்கில் தன்னை அரிவாளால் வெட்டிய ஆசாமியுடன் டாஸ்மாக் ஊழியர் துணிச்சலுடன் போராடினார். கைவிரல் துண்டாகியும் ரூ.6½ லட்சத்தை காப்பாற்றினார்.

Update: 2023-07-09 20:34 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே பணம் பறிக்கும் நோக்கில் தன்னை அரிவாளால் வெட்டிய ஆசாமியுடன் டாஸ்மாக் ஊழியர் துணிச்சலுடன் போராடினார். கைவிரல் துண்டாகியும் ரூ.6½ லட்சத்தை காப்பாற்றினார்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வியாபாரம் முடிந்த பின்பு வசூலாகும் பணத்தை இரவு வீட்டிற்கு கொண்டு சென்று மறுநாள் காலையில் வங்கியில் கட்டுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார்.

வீட்டை நெருங்கியதும் அந்த ஊழியர் கோபாலகிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி விட்டு அவர் ஓட்டி சென்றார். பின்னர் கோபாலகிருஷ்ணன் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது கையில் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.6½ லட்சம் இருந்தது.

அரிவாள் வெட்டு

அப்போது இருளில் பதுங்கி இருந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென அவர் மீது பாய்ந்தார். பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபாலகிருஷ்ணன் நிலைகுலைந்தார். அதே சமயத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டாலும் அவர் பணப்பையை இறுக்கமாக பற்றிக்கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் டாஸ்மாக் மது விற்பனையான பணம் ரூ.6½ லட்சம் தப்பியது.

கைவிரல் துண்டானது

மர்மஆசாமி வெட்டியதில் கோபாலகிருஷ்ணனின் வலது கைவிரல் துண்டானது. மேலும் இடது முழங்கை, தலை ஆகிய பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அவரை பொதுமக்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்மஆசாமி நீண்ட நாட்களாக நோட்டமிட்டு கோபாலாகிருஷ்ணனை தாக்கி பணம் பறிக்க முயன்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அரிவாளால் வெட்டிய ஆசாமியுடன் துணிச்சலுடன் போராடிய டாஸ்மாக் ஊழியர், ரூ.6½ லட்சத்தை பறிகொடுக்காமல் பத்திரமாக காப்பாற்றிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்