புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 06:16 GMT

சென்னை,

மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவை தொடர்பாக புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாட்டிலும் நேற்று அமலுக்கு வந்தன.

இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நேற்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற செல்போன் பறிப்பு சம்பவத்தில் மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை முதல் வழக்காக பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் இருந்து அல்தாப் அலி, முஜ்பூர் அலி என்ற அண்ணன், தம்பி 2 பேர் நேற்று முன்தினம் இரவு ரெயிலில் சென்னை வந்தனர். பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது நண்பரை பார்ப்பதற்காக ஆட்டோவில் ஏறி வந்தனர்.

ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் முறையாக நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிடாமல் வேறோரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் கூகுள் மேப் மூலம் நுங்கம்பாக்கத்துக்கு முகவரியை கண்டுபிடித்து அவர்கள் 2 பேரும் சாலையில் நடந்து வந்தனர். அதற்குள் நேற்று அதிகாலையாகி விட்டது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் அவர்கள் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மிரட்டி செல்போன்களை பறித்து சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக நேற்று ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகார் மனு மீது மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னையில் முதல் வழக்காக செல்போன் பறிப்பு சம்பவம் வழிப்பறி வழக்காக பதிவு செய்யப்பட்டது.

புதிய சட்டத்தின்படி 304 (2) என்ற சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் வழிப்பறி சம்பவத்துக்கு பழைய சட்டத்தின்படி 392 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் கொடுக்கப்படும் புகார் மனுக்களுக்கு மட்டும் புதிய சட்டம் பயன்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுக்களுக்கு தற்போது வழக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டால் பழைய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்