தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-09-09 10:09 GMT

மதுரை,

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மதுரையில் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநாட்டை போல அமைச்சர் மூர்த்தி நடத்தினார். மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் வாக்குறுதி கொடுத்தனர். மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அமைச்சர் மூர்த்தி முதல்-அமைச்சரிடம் கேட்டு செய்து வருகிறார்.

சுய உதவிக் குழு மற்றும் பட்டா வழங்குவதற்கு அரசு மக்களை தேடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டுமனை பட்டாக்கள், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு தொடர்ந்து திமுக அரசு கொடுத்து வருகிறது. பட்டா வாங்கிய அனைவரும் நிம்மதியாக தூங்குவதை திமுக அரசு நிலைநாட்டி வருகிறது. மகளிர் இலவச பேருந்து மூலமாக பல பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நாட்டிலேயே உயிர்களை காப்பதில் தமிழகம்தான் முக்கிய இடத்தில் உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. திமுக அரசின் திட்டத்தை மக்கள் தான் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்