கருப்பு, சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

கருப்பு, சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-13 10:08 GMT

அருப்புக்கோட்டை,

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அருப்புக்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த பயிற்சி பாசறையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயற்பாட்டாளர் டான் அசோக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில்,

எதிர்காலத்தில் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு திமுக இருக்க வேண்டும். திமுக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட சுயமரியாதை உணர்வு இருக்கவேண்டும் என்ற எண்ணம் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இருக்கிறது.

இந்தியாவில் தமிழ் மொழியின் தொன்மை, திராவிடத்தின் தொன்மை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காகவே திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்படுகிறது .ஜாதி, பாகுபாடு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என அனைத்தையும் மாற்றியவர் தந்தை பெரியார்.

50 ஆண்டு காலத்திற்கு முன் நமது மூதாதையர்கள் சட்டை அணிய முடியாது. குறிப்பிட்ட தெருவில் செருப்பு அணிந்து கொண்டு செல்ல முடியாது. அதை எல்லாம் மாற்றியவர்கள் தந்தை பெரியார்.

கருப்பு, சிவப்பு இருந்தால் தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். இந்த இரண்டு கலரும் இருந்தால் தான் நீங்களும் நானும் மரியாதையாக வாழ முடியும். தமிழ் நாடு முன்னேற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்