சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நிலை - அமைச்சர் எ.வ.வேலு
சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நிலை என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தொழில் தொடங்க சிறப்பு சலுகை
உறுப்பினர் கே.பி.அன்பழகன்:- தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறவில்லை. அங்கு தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சிப்காட் - 1 தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க சிறப்பு சலுகை அளிக்க வேண்டும்.
பாலக்கோடு அரசு கல்லூரியில் 2,600 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்தக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு, வரும் கல்வியாண்டு முதல் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் 9 டாக்டர்கள், 10 நர்சுகள் உள்ளிட்ட பணியாளர்களை விரைந்து நியமிக்க வேண்டும்.
அரசு கேபிள் டி.வி.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், அரசு கேபிள் டி.வி. சிறப்பாக செயல்பட்டது. அப்போது, 33 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்'கள் இருந்தன. இப்போது அது 16 லட்சமாக குறைந்து விட்டது. புதிய 'செட்டாப் பாக்ஸ்'களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு 50 லட்சம் வாகனங்கள் இருந்தன. 2021-ம் ஆண்டு அது 5 மடங்காக உயர்ந்துவிட்டது. சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு, அப்போது 8 சதவீத மக்களே எதிர்ப்பு தெரிவித்தனர். 92 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு போராட்டம் நடத்தினார். அந்தப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் 816 சுங்கச்சாவடிகள் உள்ளன. இரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
அமைச்சர் எ.வ.வேலு:- தமிழகத்தில் 6,805 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், 5,128 கி.மீ. நீள சாலையை மத்திய அரசும், 1,677 கி.மீ. நீள சாலையை மாநில அரசும் பராமரித்து வருகிறது. தமிழகத்தில் 58 சுங்கச்சாவடிகள் உள்ளன. 38 சுங்கச்சாவடிகளில் இன்று (நேற்று) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 27 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்கக் கட்டணம் உயர்வு குறித்து மத்திய அரசிடம் கேட்டால், ஏற்கனவே போடப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்த போதும் சுங்கக் கட்டணத்தை குறைக்க நேரில் வலியுறுத்தினோம். 14 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த கூறினோம். நகராட்சி பகுதிகளில் 10 கி.மீ. இடைவெளியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை எடுக்க வலியுறுத்தினோம். இதுகுறித்து, கடைசியாக மத்திய அரசுக்கு கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி கடிதம் அனுப்பியுள்ளோம்.
தி.மு.க. அரசை பொறுத்தவரை சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். பராமரிப்பு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 40 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்பதுதான்.
இவ்வாறு விவாதம் நடந்தது.