தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணி அறிவிப்பு
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.;
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்குக் கீழ்க்கண்டவாறு இன்று நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநிலச் செயலாளர் - சி. விஜயலட்சுமி
மாநில இணைச் செயலாளர் - எஸ்.என். யாஸ்மின்
மாநிலப் பொருளாளர் - வி. சம்பத்குமார்
மாநிலத் துணைச் செயலாளர் - ஏ. விஜய்அன்பன்
மாநிலத் துணைச் செயலாளர் - எம்.எல். பிரபு
இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.