சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

புதிதாக நீதிபதிகள் நியமிக்கப்படும்போது அனைத்து சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-09-04 21:26 GMT

சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கம்பீரம்

வருகிற 13-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இங்கு குறுகிய காலமே பணியாற்றி இருந்தாலும் அவர் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலமாக நீங்கள் (நீதிபதிகள், வக்கீல்கள்) மட்டுமல்ல நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஐகோர்ட்டு 1862-ம் ஆண்டு நிறுவப்பட்டு, 160 ஆண்டுகள் பழமையானது. இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு வந்ததும், நான் கம்பீரத்தை உணர்கிறேன். செஞ்சிவப்பு வண்ணமும், கட்டிடத்தின் கூரைகளில் வண்ண கண்ணாடிகளும் கொண்ட இந்த கட்டிடம், உலக நீதித்துறைக்கே அடையாளமாக திகழ்கிறது. இதுபோல புதிய கட்டிடங்களும் அமைய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

கருணாநிதி

முன்பு சட்டக்கல்லூரியாக செயல்பட்ட கட்டிடமும் ஐகோர்ட்டுடன் இணைக்கப்படுகிறது. ஐகோர்ட்டு கட்டிடத்தை போலவே சட்டக்கல்லூரி கட்டிடமும் கம்பீரமானதுதான். இந்த கல்லூரிக்கு, டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கருணாநிதிதான். பாரம்பரியமான கட்டிடங்களை பாதுகாப்பது என்பது நமது வரலாற்றை பாதுகாப்பது ஆகும். அதில் நமது அரசு மிக கவனமாக உள்ளது.

சென்னையில் கோட்டை, சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் உள்பட பாரம்பரியமான கட்டிடங்கள் அதிகம் உள்ளன. இவை பழமையான நமது பண்பாட்டு சின்னங்கள். இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்.

அந்த வகையில் பழைய சென்னை சட்டக்கல்லூரி வளாகமும் பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்.

திராவிட அரசு

நீதியும், நேர்மையும் தமிழர் களின் வாழ்வியலில் இரண்டற கலந்தவை. அதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் கொட்டி கிடக்கின்றன. அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்து, நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது. சென்னையில் செயல்படும் ஏராளமான நீதிமன்றங்களை ஒரே இடத்தில் செயல்பட வேண்டும் என்று நீதித்துறை செய்தபரிந்துரையை முழுமையாக உடனே ஏற்றுக்கொண்டு ஒப்புதலை வழங்கினோம்.

இதன்மூலம் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, வக்கீல்களுக்கும் மிகப்பெரிய வசதியாக இருக்கும். அலைச்சல் தவிர்த்து, அமைதியாக பணியாற்ற இது வழிவகுக்கும்.

நிதி ஒதுக்கீடு

நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 35 புதிய நீதிமன்றங்களை ரூ.54.85 கோடி செலவில் அமைக்க ஆணையிட்டுள்ளது.

கோவை, காஞ்சீபுரம், திருவாரூர், திருப்பூரில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது. புதிய நீதிமன்ற கட்டிடங்கள், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த 2 ஆண்டு நிதியாண்டுகளில் ரூ.268.97 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.11.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு பாராட்டு

நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஐகோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அப்போது நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் இருக்கிறது என சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரமணா வெளிப்படையாக பாராட்டினார்.

பொதுவாக நீதியரசர்கள் வெளிப்படையாக பாராட்ட மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். அதையும் மீறி பாராட்டினார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு நீதித்துறை மீது எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

சுப்ரீம் கோர்ட்டு கிளை

தமிழ்நாட்டின் சார்பில் சில கோரிக்கைகளை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கனிவான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை சென்னையில் அமைக்க வேண்டும். இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் வழக்காடு மொழியாக அமையவேண்டும். மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இவற்றை நீதிபதிகள் பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்