உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தமிழ்நாடு மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தமிழ்நாடு மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கெளரவித்தார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம், ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்-க்கு கேடயம், ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லின்டா புருவிர்தோவாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற லுசா ஸ்டெபானி, கேப்ரியல்லா டாப்ரோஸ்கி ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓபன் டென்னிஸ் நிறைவுடன் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தமிழ்நாடு மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றவும், நமது இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் எங்களது முயற்சிகளை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னைக்கு ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸைக் கொண்டுவர உழைத்த டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் திரு விஜய் அமிர்தராஜ், விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.மெய்யநாதன் மற்றும் தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.